Tuesday, December 27, 2011

காலிஃபிளவர் பொரியல்

Posted On Dec 27,2011,By Muthukumar

தேவையானப்பொருட்கள்:

காலிஃபிளவர் - 1
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2 முதல் 3 வரை
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
இஞ்சி - ஒரு சிறு துண்டு
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

காலிஃபிளவரிலிருந்து, பூக்களை தனித்தனியாக பிரித்தெடுக்கவும். இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் காலிஃபிளவர், மஞ்சள் தூள், உப்பு போட்டு சில வினாடிகள் கொதிக்க விட்டு, காலிஃபிளவரை எடுத்து தனியாக வைக்கவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் கடலைப்பருப்பு, மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வறுத்தெடுக்கவும். சற்று ஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பிலேற்றி ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்கும் வரை வறுக்கவும். பின்னர் அதில் காலிஃபிளவரைச் சேர்த்து, சிறிது உப்பும் போட்டுக் கிளறி, மூடி வைத்து, மிதமான தீயில் 2 அல்லது 3 நிமிடங்கள் வேக விடவும். நடு, நடுவே மூடியைத் திறந்து கிளறி விடவும். கடைசியில் பொடித்து வைத்துள்ளப் பொடியைத் தூவி நன்றாகக் கிளறி விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, மேலும் ஓரிரு வினாடிகள் கிளறி இறக்கி வைக்கவும்.

கவனிக்க: இதை மைக்ரோ அவனிலும் செய்யலாம். மேற்கூறியவாறு பொடி செய்து கொள்ளவும். மைக்ரோவேவ் பாத்திரத்தில் காலிஃபிளவரைப் போட்டு அத்துடன் சிறிது எண்ணை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசறி விட்டு, அவனில் வைத்து 4 அல்லது 5 நிமிடங்கள் வேக விடவும். நிமிடத்திற்கு ஒரு முறை வெளியே எடுத்துக் கிளறி விடவும். கடைசியில் பொடியைத் தூவி மேலும் 2 நிமிடங்கள் மைக்ரோவேவ் செய்தால், சுவையான பொரியல் தயார்.


No comments:

Post a Comment