Sunday, February 19, 2012

சுண்டைக்காய் கூட்டு

Posted On Feb 19,2012,By Muthukumar

தேவையானப்பொருட்கள்:

சுண்டைக்காய் - 2 கப்
பயத்தம் பருப்பு - 1/2 கப்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
சாம்பார் வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

சுண்டைக்காயின் காம்பைக் கிள்ளி விட்டு, இரண்டாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

பயத்தம் பருப்பை, மஞ்சள் தூள் சேர்த்து, மலர வேக வைத்தெடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில், சுண்டைக்காயைப் போட்டு, அதில் சாம்பார் பொடி, சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அத்துடன், காய் மூழ்கும் அளவிற்கு தேவையான நீரைச் சேர்த்து வேக விடவும். காய் வெந்ததும் அத்துடன் வேக வைத்துள்ள பருப்பைச் சேர்த்துக் கிளறி மிதமான தீயில் கொதிக்க விடவும்.

இதற்கிடையில், தேங்காய்த்துருவல், சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றை மைய அரைத்து, கொதிக்கும் கூட்டில் சேர்த்துக் கிளறி விடவும்.

கூட்டு மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்து, கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, இறக்கி வைக்கவும்.


Monday, February 13, 2012

தக்காளி பச்சடி

Posted On Feb 13,2012,By Muthukumar

தேவையானப் பொருட்கள்:

தக்காளி (நடுத்தர அளவு) - 2
தயிர் - 1 கப்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
சர்க்கரை - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

அரைக்க:

தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கடுகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

அரைக்க கொடுத்துள்ள தேங்காய், மிளகாய், கடுகு, சீரகம் ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.

தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீரைச் சேர்த்து வேக விடவும். குழைய வேண்டாம், சற்று வெந்தாலே போதும். அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்துக் கிளறி ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்து, இறக்கி வைத்து ஆற விடவும்.

தயிருடன் சர்க்கரை, உப்பு சேர்த்து நன்றாகக் கடைந்துக் கொள்ளவும். அதில் ஆற வைத்துள்ள தக்காளியைப் போட்டுக் கிளறி விடவும்.

தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருட்களை தாளித்து பச்சடியில் சேர்க்கவும். பாத்திரத்தை மூடி, குளிர்பதனப் பெட்டியில் குறைந்தது அரை மணி நேரமாவது வைத்திருந்து பரிமாறவும்.

கலந்த சாதம் மற்றும் சப்பாத்தியுடன் தொட்டுக் கொள்ள சுவையாயிருக்கும்.

முட்டைக்கோஸ் தூள் பக்கோடா

Posted on Feb 13,2012,By muthukumar
ழக்கமான பக்கோடாவிற்கு பதில் முட்டைக்கோஸ் தூள் பக்கோடா செய்து சாப்பிட்டுப் பாருங்கள். வித்தியாசமான சுவையுடன் சூடாக சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். சத்தானதும்கூட. செய்முறை இதோ.
தேவையான பொருட்கள்
முட்டைக்கோஸ் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பச்சைக்கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
பூண்டு - 2 பல்
கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - ஒரு கைப்பிடி
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
சமையல் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
* முட்டைக்கோஸ், வெங்காயம், பச்சைமிளகாய், பச்சைக் கொத்தமல்லி தழை இவைகளை பொடியாக அரிந்து கொள்ளவும்.
* பூண்டு தட்டி வைத்துக் கொள்ளவும்.
* கடலை மாவு, அரிசி மாவுடன், நறுக்கிய முட்டைக் கோஸ், வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி மற்றும் பூண்டு சேர்க்கவும். இந்தக்கலவையில் சோடா உப்பை தெளித்தாற்போல் விட்டு கிளறிக் கொள்ளவும்.
* சமையல் எண்ணெய் 2 டீஸ்பூன் எடுத்து காய வைத்து சூடான எண்ணையை பக்கோடா மாவில் ஊற்றி பிசையவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பக்கோடா மாவை உதிர்த்தாற்போல போட்டு மொறுமொறுவென பொன்னிறமானதும் எடுக்கவும்.
* மாலைநேர சிற்றுண்டிக்கு ஏற்ற பலகாரம் இது.

Sunday, February 12, 2012

எள்ளு பொடி

Posted On Feb 12,2012,By Muthukumar

தேவையானப்பொருட்கள்:

வெள்ளை எள் - 1/2 கப்
கறுப்பு எள் - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1/4 கப்
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு
காய்ந்த மிளகாய் - 10 முதல் 12 வரை
எண்ணை - 1 டீஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

வெறும் வாணலியில் வெள்ளை மற்றும் கறுப்பு எள்ளைப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும்.

அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் கடலைப்பருப்பு, பெருங்காயம், மிளகாய் ஆகியவற்றையும் சிவக்க வறுத்தெடுக்கவும்.

வறுத்தெடுத்த எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.

சுவையான எள்ளு பொடி தயார்.

இதை சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து "எள்ளு சாதம்" செய்யலாம். இட்லி/தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

கோவா ஸ்பெஷல் மீன்

Posted On Feb 12,2012,By Muthukumar

சுற்றுலா நகரான கோவாவில் அதிகமான சுற்றுலா பயணிகளால் விரும்பிச் சாப்பிடப்படும் உணவுகளில் மீன் உணவு ஒன்று. பதமான பக்குவத்தில் வறுத்தும், பொறித்தும் எடுக்கப்படும் மீன்களை இதமான காற்றோட்டத்தில் நண்பர்கள், குடும்பத் தினருடன் அமர்ந்து ருசித்துச் சாப்பிடுவது சுகமோ சுகம்தான். வீட்டிலும் ஒருமுறை கோவா பக்குவத்தில் மீன் சமைத்து சாப்பிட்டுப் பாருங்களேன்.
தேவையான பொருட்கள்
வஞ்சிர மீன் - 1/2 கிலோ
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 250 கிராம்
தேங்காய் - 1/2 மூடி
புளி - 50 கிராம்
மிளகு - 6
செய்முறை
* மீனைச் சுத்தம் செய்து மஞ்சள்தூள், உப்பு தடவி சிறிது நேரம் ஊற வைக்கவும்.
* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீனைப் போட்டு வறுத்தெடுக்கவும்.
* தேங்காயையும், வெங்காயத்தில் பாதியளவும் எடுத்துக் கொண்டு விழுதாக்கவும்.
* மீதி வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகைத் தாளிக்கவும். வெங்காயத்தை வதக்கவும்.
* தேங்காய் விழுதைச் சேர்த்து, மிளகாய்த்தூள், போதுமான உப்பு நீர் சேர்த்துக் கிளறவும்.
* மசால் நன்கு வெந்து நீர்வற்றி கெட்டியானதும் வறுத்த மீனைச் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.