Wednesday, April 4, 2012

ஆப்பம்



Posted On April 04,2012,By Muthukumar

ஆப்பம் - வெவ்வேறு முறைகளில் தயாரிக்கப்படும் இந்த ஆப்பம்-தேங்காய்பால் சாப்பிடாத தென்னிந்தியர்களே இல்லையெனக் கூறலாம். கேரளாவில் "ஈஸ்ட்" சேர்த்து செய்வார்கள். சிலர் அரிசி கஞ்சி சேர்த்தும் இதைச் செய்வார்கள். தஞ்சை மாவட்டத்தில் செய்யப்படும் முறை இதோ:

தேவையானப்பொருட்கள்:

பச்சை அரிசி - ஒன்றரைக் கப்
புழுங்கலரிசி - ஒன்றரைக் கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
ஆப்ப சோடா - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தேங்காய்ப்பால் - 1/4 கப்

செய்முறை:

அரிசி, பருப்பு, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக 6 முதல் 8 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் நன்றாகக் களைந்து, நீரை வடித்து விட்டு, மை போல் அரைத்தெடுக்கவும். அத்துடன் உப்பு போட்டுக் க்ரைத்து, இரவு முழுவதும் அல்லது 10 மணி நேரம் புளிக்க விடவும்.

மறுநாள், மாவில் ஆப்ப சோடா, 1/4 கப் தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து, தோசைமாவை விட சற்று நீர்க்க கரைக்கவும்.

ஆப்பசட்டியை (இல்லையென்றால் அடி கனமான ஒரு வாணலியை) அடுப்பிலேற்றி சூடாக்கவும். தோசைத்துணி அல்லது சமையலறைத்தாளில் சிறிது எண்ணையைத் தொட்டு ஆப்பச்சட்டியை துடைத்து விடவும். பின்னர் ஒரு பெரிய கரண்டி மாவை அடுத்து சட்டியின் நடுவே ஊற்றி, சட்டியை இரு கைகளாலும் தூக்கி (ஒரு துணியால் பிடித்துக் கொண்டுதான்) ஒரு சுற்று சுற்றி, (மாவு சட்டியைச் சுற்றி பரவி, விடும்) அடுப்பில் வைத்து மூடி விடவும். ஓரிரு நிடங்களில் ஆப்பம் வெந்து விடும். மூடியைத் திறந்து ஆப்பம் நடுவில் வெந்திருக்கிறதா என்று பார்த்து (ஆப்பசட்டியை விரைவாகவும், சரியாகவும் சுற்றினால் அப்பம் ஓரத்தில் மெல்லியதாகவும், நடுவே திக்காவும் இருக்கும்) எடுத்து வைக்கவும். ஒரு கரண்டி காம்பால் இலேசாக நெம்பி விட்டாலே போதும். கையாலேயே எடுத்து விடலாம்.

ஒரு பக்கம் வெந்தால் போதும். திருப்பிப் போட தேவையில்லை.

தேங்காய்பாலுடனோ அல்லது உருளைக்கிழங்கு தேங்காய்ப்பால் கறியுடனோ பரிமாறலாம்.

மேற்கண்ட அளவிற்கு சுமார் 15 ஆப்பம் கிடைக்கும்.

No comments:

Post a Comment