Saturday, December 3, 2011

தம் ஆலுகோபி / Dum AlooGobi

Posted On Dec 03,2011,By Muthukumar

தேவையான பொருட்கள்;
உருளைக்கிழங்கு - 200கிராம்
காளிப்ளவர் - 200 கிராம்
எண்ணெய் - 4-6 டேபிள்ஸ்பூன்

மசாலா மிக்ஸ் செய்து கொள்ள:

புளிக்காத தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1டீஸ்பூன்
பெருஞ்சீரகத்தூள் - 1டீஸ்பூன்
மஞ்சள்தூள்- கால்டீஸ்பூன்
கரம் மசாலா - அரைடீஸ்பூன்


தாளிக்க :
மிளகு, சீரகம், சோம்பு -சிறிது
கிராம்பு - 2
பட்டை - 1
பிரியாணி இலை -1
வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
மல்லி இலை - சிறிது அலங்கரிக்க.

உருளைக்கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக்கி கொள்ளவும். காளிப்ளவரை சிறிய பூக்களாக பிரித்து கொதிக்கும் நீரில் போட்டு வடிகெட்டி எடுத்து வைக்கவும்.

ஒரு பவுலில் தயிருடன் மேலே குறிப்பிட்ட பொருட்களை கலந்து வைக்கவும்.


ஒரு சாலோ நான்ஸ்டிக் ப்ரை பேனில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கி உருளைக்கிழங்கு,காளிப்ளவர் போட்டு,சிறிது உப்பு தூவி பொரித்து எடுக்கவும்.



பொரித்த பிறகு இருக்கும் எண்ணெய் தாளிக்க பயன்படுத்தலாம்.

கடாயில் எண்ணெய் விட்டு காயவும் தாளிக்க கொடுத்த பொருட்களை சேர்த்து பொரிய விடவும்.நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். தயிருடன் கலந்து வைத்த மசாலா மிக்ஸை சேர்க்கவும். நன்கு கொதி வரட்டும்.

பொரித்த உருளை காளிப்ளவர் சேர்த்து பிரட்டவும். ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.

மூடி போட்டு 5 நிமிடம் மசாலாவுடன் சேர்ந்து வேகவிடவும். உப்பு சரி பார்க்கவும்.

கிரேவி கெட்டியாகி கமகமவென்ற மணத்துடன் இருக்கும்.அடுப்பை அணைக்கவும். நறுக்கிய மல்லி இலை தூவி பரிமாறவும்.

சுவையான தம் ஆலு கோபி ரெடி.இதனை சப்பாதி,நாண்,ப்லைன் ரைஸ் உடன் பரிமாறலாம்.
கிரேவியாக வேண்டும் என்றால் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கலாம்.
அவரவர் தேவைக்கு மசாலா கூட்டி, குறைத்து கெட்டித்தனமைக்கு தகுந்தபடி வைத்துக் கொள்ளலாம்.

மீல்மேக்கர் மசாலா

Posted On Dec 03,2011,By Muthukumar


தேவையானவை
மீல்மேக்கர் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 2
தேங்காய் துருவல் - 1/2 கப்
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 8 பல்
சோம்பு - 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 8
உப்பு எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
* 3 கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, அதில் மீல் மேக்கரைப் போடவும். அரை, முக்கால் மணி நேரம் ஊற விடவும். ஊறியவுடன் இறுகப் பிழிந்து தண்ணீரை வடித்து எடுக்கவும்.
* தேங்காய், இஞ்சி பூண்டு, சோம்பு, மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
* வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு, வதக்கவும். வதங்கியதும் அரைத்த கலவையை சேர்க்கவும். 2 நிமிடம் கொதிக்க விடவும். ஊறிய மீல் மேக்கர், 1/4 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் சுருள சுருள கிண்டி இறக்கவும்.

Friday, December 2, 2011

மட்டன் டிக்கா மசாலா

Posted on Dec 03,2011,By Muthukumar

தேவையானவை
ஆட்டிறைச்சி - 1/2 கிலோ
தனியா விதை - 2 டீஸ்பூன்
வெங்காய விதை - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
கசகசா - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தயிர் - 3 டீஸ்பூன்
பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்
வெங்காய விழுது - 1 டீஸ்பூன்
லவங்கம் - 4
மிளகு - 8
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை
* மட்டனை ஒரு அங்குல சதுர துண்டுகளாக நறுக்கவும். தயிரை அடித்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து ஆட்டிறைச்சி துண்டுகளில் தடவி, ஊற வைக்கவும்.
* தனியா, கசகசா, சீரகம், வெங்காய விதை, லவங்கம், மிளகு இவற்றை வெறுமனே வறுத்துப் பொடி செய்யவும்.
* தேவையான உப்பை இதில் சேர்த்துக் கலந்து ஆட்டிறைச்சி துண்டுகளில் புரட்டி வைக்கவும். இதை ஆறிலிருந்து எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
* ஒரு கடாயில் எண்ணையைக் காய வைத்து காய்ந்ததும், ஊற வைத்த மட்டனைப் பொரித்தெடுக்கவும்.
* வெங்காயத்தை வட்டமாக நறுக்கி, மட்டன் டிக்கா மசாலாவை அலங்கரிக்கவும்.

மிளகு அடை



Posted: 02 Dec 2011 By Muthukumar

தேவையானப்பொருட்கள்:

புழுங்கலரிசி - 1 கப்
பச்சரிசி - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
துவரம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
தேங்காய் பொடியாக நறுக்கியது - 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - தேவையான அளவு

செய்முறை:

அரிசியையும், பருப்பையும் 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய அரிசி பருப்பை நன்றாகக் கழுவி, தண்ணீரை வடித்து விட்டு, மிக்ஸியில் போட்டு, அத்துடன் மிளகு, சீரகம், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். மிக்ஸியிலிருந்து எடுக்குமுன், தேங்காய்த் துருவலைப் போட்டு ஓரிரண்டு சுற்றுகள் ஓடவிட்டு எடுக்கவும்.

தோசைக்கல்லை காய விட்டு, சிறிது எண்ணை விட்டு, ஒரு கை மாவை எடுத்து அடையாக தட்டவும். அதன் மேல் சிறிது தேங்காய்த் துண்டுகளைத் தூவி விடவும். அடையைச் சுற்றி சிறிது எண்ணை விட்டு சிவக்க வேக விடவும். ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்டு, மறு புறமும் சிவக்க வெந்ததும் எடுக்கவும்.

இந்த முறையில் செய்யப்படும் அடை, சற்று அழுத்தமாக இருக்கும். ஆனால் சுவை நன்றாகவே இருக்கும். மிருதுவான அடை வேண்டுமென்றால், மாவில் சிறிது தண்ணீரைச் சேர்த்து, அடை மாவு பதத்திற்கு கரைத்து, கரண்டியால் எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி, வட்டமாக பரப்பி, அதன் மேல் தேங்காய்த்துண்டுகளைத் தூவி சுட்டெடுக்கலாம்.

வெல்லம் மற்றும் வெண்ணையுடன் பரிமாறவும். காரம் தேவையென்றால், இட்லி மிளகாய் பொடியுடனும் சாப்பிடலாம்.

இந்த அடை கார்த்திகை பண்டிகையின் பொழுது பெரும்பாலானோர் வீடுகளில் செய்யப்படுவதால், இதை "கார்த்திகை அடை" என்றும் அழைப்பார்கள்.

வாழைக்காய் வறுவல் / Raw Banana(Plaintain) Varuval

posted on Dec 02,2011,By Muthukumar

தே.பொருட்கள்
வாழைக்காய் - 1
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
கடலைமாவு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க
மிளகு - 1/2 டீஸ்பூன் 
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பூண்டுப்பல் - 2

செய்முறை
*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.வாழைக்காயை வட்டமாக வெட்டி மஞ்சள்தூள் சேர்த்து தேவையானளவு நீர் விட்டு பாதியளவு வேகவைத்து நீரை  வடிக்கட்டவும்.

*பின் அதனுடன் உப்பு+அரைத்த மசாலா+மிளகாய்த்தூள்+கடலைமாவு சேர்த்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

*பின் கடாயில் எண்ணெய்விட்டு இருபக்கமும் வறுத்தெடுக்கவும்.

Thursday, December 1, 2011

பனை ஓலை கொழுக்கட்டை

Posted On Dec 01,2011,By Muthukumar


தேவையானப்பொருட்கள்:

பனை ஓலை(நடுப்பகுதி)- 10 முதல் 15 துண்டுகள் (ஆறு அங்குல நீளம்)
பச்சரிசி மாவு - 3 கப்
கருப்பட்டி அல்லது வெல்லத்தூள் - 2 கப்
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1 கப்

செய்முறை:

கருப்பட்டியில் அரைக்கப் தண்ணீரைச் சேர்த்து காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்.

பச்சரிசி மாவுடன் ஏலக்காய் தூள்,சுக்குப்பொடி, தேங்காய்த்துருவல், கருப்பட்டி நீர் ஆகியவற்றைச் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். மாவு மிகவும் கெட்டியாக இல்லாமல் சிறிது குழைவாக உள்ளவாறு நீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும்.

ஒரு ஓலையை விரித்து நடுவில் மாவை வைத்து, ஓலை அளவிற்கு நீளமாக அழுத்தி, மூடவும். ஓலை பிரிந்து விடாமல் இருக்க ஒரு நார் அல்லது நூல் கொண்டு கட்டி வைக்கவும்.


இதேபோல் மீதமுள்ள மாவு அனைத்தையும் தயார் செய்து இட்லி தட்டில் வைத்து 15 அல்லது 20 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

சற்று ஆறியபின், ஓலையைப் பிரித்து கொழுக்கட்டையைத் தனியாக எடுத்து வைக்கவும்.


இந்தக் கொழுக்கட்டை, திருக்கார்த்திகைத் தினத்தன்று, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் செய்யப்படும் ஒரு சிறப்பு பலகாரம்.

கார்த்திகை அப்பம்



Posted On Dec 01,2011,By Muthukumar


தேவையானப்பொருட்கள்:

அரிசிமாவு - 1 கப்
வெல்லப்பொடி - 1/2 முதல் 3/4 கப் வரை
நன்கு கனிந்த வாழைப்பழம் - 1
பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் - 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

1/2 கப் தண்ணீரில் வெல்லத்தைப் போட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

வாழை பழத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

அரிசிமாவு, மசித்த வாழைப்பழம், தேங்காய்த் துண்டுகள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதில் வெல்ல நீரை விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். தேவையானால் சிறிது நீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் அதில் ஒரு டேபிள்ஸ்பூன் மாவை எடுத்து ஊற்றவும். பொன்னிறமாக சிவக்கும் வரை பொரித்து எடுக்கவும்.

குறிப்பு: அரிசிமாவிற்குப்பதில், மைதா அல்லது கோதுமை மாவிலும், ரவாவிலும் கூட இந்த அப்பத்தை செய்யலாம். அல்லது எல்லா மாவிலும் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்தும் செய்யலாம். வெல்லத்திற்கு பதில் சர்க்கரையையும் பயன் படுத்தலாம். அப்பம் வெள்ளையாக இருக்கும்.

மேலும், இதை எண்ணையில் பொரித்தெடுப்பதற்குப் பதில், குழிப்பணியாரச் சட்டியிலும் பணியாரம் செய்வதுபோல் சுட்டெடுக்கலாம்.