Thursday, April 30, 2015

கொத்துக்கறி பொடிமாஸ்

Posted By Muthukumar,On April 30,2015
minced mutton potimas
தேவை:
கொத்துக்கறி- 1/2 கிலோ; கடலை பருப்பு, சின்ன வெங்காயம்-தலா-200 கிராம்; துருவிய தேங்காய்-2 டம்ளர்; பூண்டு-10 பல்; பச்சை மிளகாய்-8; மிளகாய்த் தூள்- 2 தேக்கரண்டி; இஞ்சி,பட்டை, சோம்பு, எண்ணெய், உப்பு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலை பருப்பு, பட்டை, சோம்பு போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும். கொத்துக்கறியைக் கொட்டி வேகும்வரை கிளறிக்கொண்டே இருக்கவும். பின்னர் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, மிளகாய்த்தூள், உப்பு தூவி, வெந்ததும் தேங்காய்த் துருவலைப் போட்டு இறக்கவும். சுவையான கொத்துக்கறி பொடிமாஸ் தயார். அவித்த முட்டையின் வெள்ளைக் கருவை சிறு துண்டுகளாக நறுக்கிச் சேர்த்தால், கூடுதல் சுவையாக இருக்கும்.

Friday, April 17, 2015

ஜிகிர்தண்டா- செய்வது எப்படி?

  • Posted By Muthukumar,On April,17,2015
  • jikirthanda
நாட்டு மருந்துக் கடைகளில் பாதாம் பிசின் கிடைக்கும். இது பனங்கற்கண்டு போல இருக்கும். இதை ஒருமுறை அலசி, ஊற வைக்கவேண்டும். ஒரு ஸ்பூன் பாதாம் பிசின் ஊறியதும், ஒரு பெரிய கப் அளவு வந்துவிடும். அதனால், குறைவாகவே தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊறவைக்கவேண்டும். ஊறிய பாதாம் பிசின் உடைத்த ஐஸ் கிரிஸ்டல் போல இருக்கும். இதனை ஃப்ரிஜ்ஜில் வைத்து 4 நாட்கள் வரை உபயொகிக்கலாம்.
* 4 டம்ளர் தயாரிக்க:
தேவை:
பால்-அரை லிட்டர்( காய்ச்சி ஃப்ரிஜ்ஜில் வைத்து ஜில்லாக்கவும்.) ; ஊற வைத்த பாதாம் பிசின்-2 டேபிள் ஸ்பூன்; நன்னாரி சர்பத்-2 டேபிள் ஸ்பூன்; பாசந்தி-2 டேபிள் ஸ்பூன்; வெனிலா ஐஸ்கிரீம்-2 பெரிய ஸ்கூப்.
செய்முறை:
பெரிய கண்ணாடி டம்ளரில் முதலில் பாம் பிசின் போடவும். அதன் மேல் சிறிது சர்பத் ஊற்றவும். கொஞ்சம் ஐஸ் கிரீம் போடவும். இப்போது பாலை 3/4 டம்ளர் அளவு ஊற்றவும். அதன் மேல் மீண்டும் சர்பத், ஐஸ் கிரீம், மேலே பாசந்தி, மீண்டும் ஒரு சிறிய ஸ்பூன் சர்பத், அழகுக்கு ஊற்றி, பெரிய ஸ்பூன் போட்டு வைக்கவும்.
கவனத்துக்கு:
* இப்படி படிப்படியாக போடுவதால், குடிக்கும்போதும் படிப்படியான சுவையை அறியலாம்.
* வெனிலா ஐஸ் கிரீம் வீட்டில் செய்வதாக இருந்தால், சர்க்கரையை சிறிது கேரமைஸ் செய்து போடவும். நல்ல கலர் வரும்.
* அதிகம் இனிப்பு தேவைப்படுபவர்கள் பாலில் சிறிது சர்க்கரை கலந்தும் ஃப்ரிஜ்ஜில் வைக்கலாம்.

Monday, April 13, 2015

தினை தோசை


Posted By Muthukumar,On April 13,2015


தேவையானப்பொருட்கள்:

தினை மாவு - 1 கப்
கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் வரை
எண்ணை - 4 டீஸ்பூன்
உப்பு - 3/4 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

தினை மாவு, கோதுமை மாவு, அரிசி மாவு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, தேவையான தண்ணீரை விட்டு, தோசை மாவு பதத்திற்கு சற்று நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பிலேற்றி சூடானதும் எண்ணை தடவி விட்டு, ஒரு கரண்டி மாவை எடுத்து, கல்லின் ஓரத்திலிருந்து வட்டமாக ஊற்றி நடுவில் முடிக்கவும் (ரவா தோசைக்கு ஊற்றுவது போல்).  ஒரு டீஸ்பூன் எண்ணையை தோசையைச் சுற்றி ஊற்றவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.  ஒரு பக்கம் சிவக்க வெந்ததும், திருப்பி போட்டு மறு பக்கமும் சிவக்க வெந்தவும் எடுத்து வைக்கவும்.

இதற்கு வெங்காய சட்னி நன்றாக இருக்கும்.

கவனிக்க:  தினை மாவு எல்லா கடைகளிலும் கிடைக்கிறது.  இதில் அரிசி மாவிற்குப் பதில், ஒரு கரண்டி சாதரண தோசை மாவையும் சேர்க்கலாம்.  வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்தும் செய்யலாம்.