Tuesday, February 24, 2015

எண்ணெய் கத்திரிக்காய்


Posted By Muthukumar,On Feb 24,2015

தேவையான பொருட்கள்;

கத்திரிக்காய் ( டார்க் வயலெட் நிற கத்திரிக்காய்) – 1/4 கி.எண்ணெய்-4 டீஸ்பூன்; கடுகு, உளுத்தம் பருப்பு- தலா-1 டீ ஸ்பூன்; கடலை பருப்பு- 1 டீஸ்பூன்; தனியா -2 ஸ்பூன்; காய்ந்த மிளகாய்-2 ; பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் -தலா1/2 டீ ஸ்பூன்; துருவிய தேங்காய் 4 டீஸ்பூன்; உப்பு-தேவைக்கு.

செய்முறை:
கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் தனியா மூன்றையும் வெறும் கடாயில் வறுத்து , மிக்ஸியில் கொறகொறப்பான பொடியாக அரைத்துக் கொள்ளவும். . கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். கத்தரிக்காயை முழுதாக எடுத்துக்கொண்டு அதன் கீழ்ப்பகுதி சேதமடையாமல் ஒரு பூ வடிவில் நறுக்கிக்கொள்ளவும்.அதனுள் வறுத்து அரைத்த பொடியை ஸ்டஃப் செய்யவும். அதில் உப்பு, மஞ்சள்தூள், துருவிய தேங்காய் சேர்த்துக்கொள்ளவும். இந்த ஸ்டஃப்டு கத்திரிக்காயை அடுப்பில் வைத்து பொறுமையாக வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்தால், வேக வைக்கும்போது அடி பிடிக்காமல் இருக்கும். ஒரு மூடி போட்டு மூடி வைத்து அவ்வப்போது கத்திரிக்காயை நன்றாகக் கிளறி விடவும். சாதாரண கத்திரிக்காய் என்றால், நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.

Wednesday, February 11, 2015

இஞ்சிப் பால்..!



ஒருவர், ஒருவேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சி ப்பால் செய்யறது எப்படி?
ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய
இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.
அப்புறம் அரைக்குவளை காய்ச்சிய பால் எடுத்துக் கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவை யான அளவில் தேன் அல்லது பணங்கற் கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவு தான். இஞ்சிப் பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.
அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?
1. நுரையீரல் சுத்தமாகும்.

2. சளியை ஒழுச்சு கட்டிடும்.
3.வாயுத்தொல்லை என்பதே வராது
4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.
5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடைகொடுத்துவிடலாம்.
6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.
7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.
8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.
9. முக்கியமா பெண்களுக்கு சினை ப்பையில் வரக் கூடிய புற்று நோய்க் கட்டிகளை நீக்கி விடும்.
10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.
அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?

3.வயசுக்குமேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம் .
இந்த இஞ்சிப் பாலை யார் யார் சாப்பிட க்கூடாது?
வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சலால் பாதிக்க‍ப்பட்ட‍வர் கள் கண்டிப்பாக‌ தவிர்க்க வேண்டும்.

Monday, February 9, 2015

வெண்டைக்காய் சாம்பார்


Posted By Muthukumar,On Feb 9,2015
ladies finger sambar
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய்- தேவையான அளவு; கடுகு-1 ஸ்புன்; உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு- தலா 1 ஸ்பூன்; வெந்தயம் , பெருங்காயத்தூள், மஞ்சள் தூள்- தலா 1/2 ஸ்பூன்; பச்சை மிளகாய்-1; காய்ந்த மிளகாய்-1 கறிவேப்பிலை, கொத்தமல்லி-சிறிதளவு; நெய்-1/2 ஸ்பூன்; சாம்பார்த்தூள்-2 ஸ்பூன், துவரம் பருப்பு-1/4 கப்; புளி- சிறிய எலுமிச்சை அளவு; உப்பு- தேவையான அளவு; எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை;
துவரம் பருப்பில் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து, குக்கரில் குழைய வேக விடவும். வெந்ததும் எடுத்து மசித்து வைக்கவும். புளியைத் தண்ணீரில் வேக வைத்து , வடிகட்டி, கரைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளிக்கவும். அத்துடன் உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பெருங்காயம், வெந்தயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும், கறிவேப்பிலை ,வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும்.மீதமிருக்கும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பிறகு புளித் தண்ணீரை சேர்க்கவும். அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை கொதிக்க விடவும். கொதித்ததும், சாம்பார்தூள் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் , பருப்பைச் சேர்கக்வும். நன்கு கிளறி இரண்டு கொதி வந்தவுடன் 1/2 ஸ்பூன் நெய் சேர்த்து , கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

Sunday, February 8, 2015

வெண்டைக்காய் தயிர் பச்சடி


Posted By Muthukumar,On Feb 8,2015

தேவையானப்பொருட்கள்:

வெண்டைக்காய் - 8 முதல் 10 வரை
தயிர் - 2 கப் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

அரைக்க:

பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு சிறு துண்டு
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

வெண்டைக்காயைக் கழுவி, துடைத்து விட்டு, சிறு வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும்.

தோசைக்கல் அல்லது பரவலான தாவாவை அடுப்பிலேற்றி, 1 அல்லது 2 டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் வெண்டைக்காய் துண்டுகளை பரப்பி வைத்து வேக விடவும்.  அடிபக்கம் சிவக்க வதங்கியதும், ஒவ்வொரு துண்டையும் திருப்பிப் போட்டு மறு பக்கமும் சிவக்கும் வரை வதக்கி எடுக்கவும்.  (இதை மைக்ரோவேவ் அவனிலும் வறுத்து எடுக்கலாம்.  சிலர் எண்ணையில் வெண்டைக்காயை பொரித்தும் எடுப்பார்கள்).

அரைக்க கொடுத்துள்ளப் பொருட்களை விழுதாக அரைத்தெடுக்கவும். தயிரை நன்றாகக் கடைந்து அத்துடன் அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும். வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயைச் சேர்த்து, தாளிக்க கொடுத்துள்ளவற்றைத் தாளித்துக் கொட்டி, மீண்டும் நன்றாகக் கலந்து பரிமாறவும்.


சாதம், சப்பாத்தி ஆகியவற்றுடன் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

கவனிக்க:  தயிரை தாளித்து தயார் செய்து வைத்து விட்டு, பரிமாறும் முன் வெண்டைக்காயைச் சேர்த்தால், கொழகொழப்பில்லாமல் நன்றாக இருக்கும்.

மணப்பாறை முறுக்கு


 Posted By Muthukumar,On Feb 8,2015
manapparai murukku மணப்பாறை முறுக்கு சமையல் குறிப்பு


மூக்கு முட்ட சாப்பிட்டாலும் , நொறுக்குத் தீனி இல்லாவிட்டால் பெரும்பாலோனோர் தவித்துப் போய்விடுவார்கள். நொறுக்குத் தீனிகளில் முதல் இடத்தைப் பிடித்திருப்பது  முறுக்குதான். முறுக்கு என்றதுமே ‘மணப்பாறை முறுக்கு தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு  ‘மணப்பாறை- முறுக்கு’ க்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.
தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள  திருச்சியிலிருந்து  மணப்பாறைக்கு காரில் ஒரு மணிநேரத்தில் சென்று சேரலாம். இங்குதான் சுவையும் மணமும் நிறைந்த  மணப்பாறை முறுக்கு தயாரிக்கப்படுகிறது.  கல்ஃப்  நாடுகள், மலேஷியா, சிங்கப்பூர், அமெரிக்கா  உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும்  அனுப்பிவைக்கப்படுகிறதாம்.  ரோமில் உள்ள ஒரு பிஷப்புக்கும் கூட  இந்த முறுக்கை அனுப்பிவைக்கிறார்களாம்.  இனிப்பாகவும் இல்லாமல், காரமாகவும் இல்லாமல் ஒரு வித்தியாசமான சுவையோடு மணக்கும் இந்த மணப்பாறை முறுக்கு அனைவராலும் விரும்பப்படுகிறது.
இந்த முறுக்குக்கு ஒருவித அபாரமான ருசி எப்படி ஏற்படுகிறது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயற்கையே!. இதற்கு உள்ளூர்வாசிகள் கூறும் பதில் என்னவென்றால்,  மணப்பாறையில் கிடைக்கும் லேசான உப்பு ருசி கலந்த தண்ணீர்தான் என்கிறார்கள். இந்த  உப்புத் தண்ணீர்தான் இந்த முறுக்குக்கு ஒருவித வாசனையையும்  கொடுப்பதாக சொல்கிறார்கள். இது மட்டுமின்றி, முறுக்கை இவர்கள் இரண்டு தடவை பொறித்தெடுப்பதாக சொல்கிறார்கள்.ஒருமுறை பொறித்தெடுத்து வைத்துவிட்டு 3 நிமிடம் கழித்து கரகரப்பாக வரும்படி மீண்டும் பொறித்தெடுக்கிறார்கள்.   இப்படி  பொறிப்பதால் வித்தியாசமான ருசி கிடைப்பதாக சொல்கிறார்கள்.  இந்த மண்ணிலேயே விளையும்  பச்சரிசியைத்தான்  முறுக்கு தயாரிக்க பயன்படுத்துகிறார்கள். அதுவும் பிரத்தியேகமான ருசிக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.  சில ஸ்பெஷல் ஆர்டர்கள் வந்தால், முறுக்கு மாவுடன் நெய்யோ, வெண்ணையோ முறுக்கு மாவுடன் கலந்து ரிச்சாக  தயாரிக்கப்படுகிறது.
மணப்பாறை முறுக்கு செய்யும் முறை எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி -1 கிலோ;கொஞ்சமாக உளுத்தம்பருப்பு   இரண்டையும் நன்கு மாவாக்கி அத்துடன் ஜீரகம் , எள்,பெருங்காயம் ஓமம், 10 கிராம் உப்பு இவற்றை கலந்து  அத்துடன்  தண்ணீரை கொஞ்சமாக விட்டுக் கலந்து, அத்துடன் கொஞ்சம் எண்ணெயும்  சேர்த்துப் பிசைந்து கொண்டபின்,  முறுக்கு மேக்கரில் விட்டு  முறுக்கு இழைகளாக தயாரித்து, அந்த முறுக்குகளை கொஞ்ச நேரம் உலர வைக்க வேண்டும். கொஞ்ச நேரம் கழித்து எடுத்து கடலை எண்ணெயில் பொறித்து எடுத்து வைத்து விட்டு இரண்டாவது பேட்ச் முறுக்குகளைப் போட்டு பொறித்து எடுத்து வைக்கவேண்டும்.  பிறகு முதலில் பொறித்துவைத்த முறுக்குகளை திரும்பவும் பொறிக்கவேண்டும். அடுத்து இரண்டாவது பேட்ச் முறுக்குகளை  பொறிக்க வேண்டும். இப்படியாக இரண்டிரண்டு தடவைகளாக பொறிக்கவேண்டும். பின்னர், காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்து டைட்டாக மூடிவிட வேண்டும். கொஞ்சம் ரிச்சாக இருக்கவேண்டுமானால், வெண்ணெய் அல்லது நெய் சேர்க்கலாம். இதுவே மணப்பாறை முறுக்கு செய்யும் விதம்.!
ஆனாலும் மணப்பாறையில் ஊறும் தண்ணீரும் மணப்பாறையில் விளையும் அரிசிக்கும் மட்டும்தான் அந்த சுவையும் மணமும் வருமாம்!.
முறுக்கு செய்யும் முறை என்னவோ எளிதாகத் தோன்றினாலும், கடின உழைப்பு தேவைப்படுகிறது. குடிசைத் தொழிலாக இதனை  வீட்டுக்கு வீடு செய்யும் மக்கள் விடிகாலை 4 .00 மணிக்கு எழுந்து மதியம் 2.00 மணி வாக்கில் வேலையை முடிக்கிறார்கள். தீபாவளி ஸீசனில் மட்டும் வேலை முடிய நள்ளிரவு தாண்டிவிடுமாம்.
மணப்பாறை முழுவதும் 200 குடும்பங்களுக்கும் மேலாக முறுக்கு தயாரிப்பையே முக்கிய தொழிலாக செய்கிறார்கள். ஆனாலும் இவர்களுக்கு பெருத்த லாபம் கிடைப்பதில்லை. குறைவான மார்ஜின் வைத்துதான் முறுகள்  விற்கப்படுகின்றன. . ஒரு முறுக்கு ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பொருட்களின் விலை ஏற்றம் இந்த முறுக்கு விலையில் மாற்றம் கொண்டு வருவதில்லையாம்.  சில ஸ்பெஷல் முறுக்குகளும் கிடைக்கின்றன. அவை இரண்டு ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. அவை இரண்டு மடங்கு பெரியதாக இருப்பதோடு, வெண்ணெய் சுவையோடு இள மஞ்சள் வண்ணத்தில் கிடைக்கின்றன.
இந்த மணப்பாறை முறுக்குகளை மறைந்த தலைவர் ராஜீவ் காந்தியும் ஆஸ்கார் புகழ் ஏ.ஆர். ரஹ்மானும் விரும்பி சாப்பிடுவார்களாம்.

Saturday, February 7, 2015

மைதா அல்வா

Posted By Muthukumar,On Feb 7,2015
maida halwa
தேவையான பொருட்கள்:
மைதா- 1 கப்; சர்க்கரை-2 கப்; நெய்-100 கிராம்; முந்திரி பருப்பு-கைப்பிடியளவு; கேசரி பௌடர் மற்ரும் ஏலக்காய் பௌடர்-சிறிதளவு.
செய்முறை:
மைதா மாவை 1.5 டம்ளர் தண்ணீரில் கட்டிகள் இல்லாமல் கரைத்துக்கொள்ளவும். இந்தக் கரைசல் தோசை மாவு பதத்துக்கு இருக்கவேண்டும். ஒரு வாணலியில் சிறிதளவு நெய்யைச் சூடாக்கி, அதில் முந்திரியை வறுக்கவும். அதை ஒரு பக்கம் வைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் சர்க்கரையைப் போடவும். சர்க்கரை கரைந்ததும், தீயைக் குறைத்து மெதுவாக மைதாக் கரைசலை சேர்க்கவும். தொடர்ச்சியாக கலக்கிக்கொண்டே இருக்கவும். கேசரி பௌடரைச் சேர்க்கவும். மீதமுள்ள நெய்யைச் சேர்கக்வும். விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். கட்டிகள் விழாமல் இருக்கவேண்டும். அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் வரவேண்டும். பின்னர் வறுத்த முந்திரியைச் சேர்த்து ஏலக்காய்ப் பொடியையும் சேர்த்துக் கலக்கவும். சுவையான மைதா அல்வா ரெடி.

திணை லட்டு

Posted By Muthukumar ,On Feb 7,2015
thinai
பொதுவாக , சிறு தானியங்களால், செய்யப்பட்ட உணவுகள் உடல் நலத்தைக் கெடுக்காது. குறிப்பாக திணையில் செய்யப்படும் உணவுகள் நோய்களை அண்டவிடாது. மழை, குளிர் கலத்துக்கு ஏற்றது திணை. இத்தகைய திணையில் செய்யப்படும் லட்டு, கார்த்திகை மாத சிறப்பு உணவு வகைகளில் பிரசித்தி பெற்றது.
திணை லட்டு- செய்வது எப்படி?:
தேவையான பொருட்கள்:
திணை-1 கப்; பாசிப் பருப்பு-1 கப்; வெல்லம்-2 கப்; நெய்-50 கிராம்; முந்திரி-4; ஏலக்காய்ப் பொடி-சிறிதளவு.
செய்முறை:
திணை, பாசிப் பருப்பு இரண்டையும் பொன்னிறமாக வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். வெல்லத்தைப் பாகு போல் காய்ச்சி, திணை மற்றும் பாசிப் பருப்பு பொடியுடன் கலக்கவும். இத்துடன் நெய், முந்திரி பருப்பு, ஏலக்காய் சேர்த்து கெட்டியாக வரும்வரை கிளறி லேசாக ஆறவைத்து, உருண்டைகளாகப் பிடித்தால், ‘ திணை லட்டு ‘ ரெடி.
பலன்:
மழை குளிர் காலத்தில், ஏற்படும் நெஞ்சு சளியை குணப்படுத்தும் வல்லமை திணைக்கு உண்டு. மேலும் குளிர்ந்திருக்கும் உடலுக்கு திணை உஷ்ணத்தைத் தரும். ஆனால், அதிக அளவு உஷ்ணம் உடலுக்கு நலல்தல்ல என்பதால், பால், நெய்யுடன் சேர்த்து, திணையை சாப்பிடுவது நல்லது. இது தவிர இனப் பெருக்க உறுப்பு செயல்பாடுகளுக்கு திணை நல்ல ஊகக் மருந்து. எல்லாவற்றையும் விட திணையால் உடல் எடை அதிகரிக்காது எனப்து கூடுதல் சிறப்பு.