Friday, January 13, 2012

காய்கறி கூட்டு

Posted On Jan 13,2012,By Muthukumar

தேவையானப்பொருட்கள்:

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1
பறங்கிக்காய் - ஒரு சிறு துண்டு
அவரைக்காய் - 5 அல்லது 6
உருளைக்கிழங்கு - 1
சேனைக்கிழங்கு - ஒரு சிறு துண்டு
வாழைக்காய் - பாதி
பச்சை மொச்சைக் கொட்டை - 1 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
புளி - ஒரு நெல்லிக்காயளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

வறுத்தரைக்க:

கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4 முதல் 5 வரை
தனியா - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
அரிசி - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

புளியை ஊற வைத்து, சாற்றைப் பிழிந்தெடுத்து கொள்ளவும்.

துவரம் பருப்பை குக்கரில் போட்டு வேக வைத்தெடுக்கவும்.

காய்கறிகளை நன்றாகக் கழுவி, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். காய்கறி துண்டுகள், பச்சை மொச்சைக் கொட்டை ஆகியவற்றை, ஒரு அடி கனமான பாத்திரத்தில் போட்டு அத்துடன் உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்து, காய்கறி மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி வேக விடவும்.

இதற்கிடையே, வறுக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு டீஸ்பூன் எண்ணையில் வறுத்தெடுத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

காய்கறிகள் வெந்தவுடன் புளிச்சாற்றை ஊற்றி கொதிக்க விடவும். ஒரு கொதி வந்தவுடன், வேக வைத்துள்ளப் பருப்பைக் கடைந்து சேர்க்கவும். மீண்டும் ஒரு கொதி வந்ததும், அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்துக் கிளறி விடவும். மறுபடியும் ஒரு கொதி வந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

திருவாதிரை, பொங்கல் ஆகிய பண்டிகையின் பொழுது இந்தக் கூட்டை செய்வார்கள். இதை "தாளகம்" என்றும் "பொங்கல் கூட்டு" என்றும் அழைப்பார்கள்.


No comments:

Post a Comment